யோதாம் || அறிந்து கொள்வோம் பகுதி - 74 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 74


யோதாம் 


வேதத்தில் இரண்டு யோதாம் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர் உசியாவின் குமாரன்.

இரண்டாவது கிதியோனின் இளைய மகன்.


1.உசியாவின் குமாரன்.


 உசியாவிற்க்கு  பிறகு யூதாவின் 12-வது ராஜாவாக ஆளுகைக்கு வந்தான். இவனுடைய தாயின் பெயர் எருசாள்.


உசியாவின் கடைசி நாட்களில் அவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டதின் காரணமாக அரசுக் காரியங்களைக் கவனிக்க முடியவில்லை. இவனுக்குப் பதிலாக இவனுடைய குமாரன் யோதாம் ஏழு ஆண்டுகள் அரசாங்கத்தைக் கவனித்துவந்தான்.

 (2 நாளா.26:21, 23; 27:1).


யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாக இருந்து 16- ஆண்டுகள்  எருசலேமில் ஆளுகைசெய்தான்.

 (2 நாளா. 27:1). 

இவன் தன் தகப்பனைப் போலக் கர்த்தருடைய பார்வைக்குச் சரியானவைகளைச் செய்தான்.


"அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஒபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும் காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.

(2 நாளா. 27:3, 4).

இவனுடைய ஆளுகையின்போது தேசம் செழிப்பாக இருந்தது." யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான்.

(2 நாளா. 27:6).


இவன் அம்மோன் புத்திரரை வெற்றிகொண்டு அவர்களைக் கப்பம் கட்ட வைத்தான். ஆண்டுக்கு அவர்கள் நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமை யையும் கொடுத்தார்கள் (2 நாளா. 27:5). 

நூறு தாலந்து வெள்ளி என்பது 3.4 மெட்ரிக் கடன் வெள்ளியாகும். பதினாயிரம் கலம் என்பது 1350 மெட்ரிக் டன்களாகும்.

ஏசாயா, ஓசியா, மீகா போன்ற தீர்க்கதரிசிகள் இவனுடைய சமகாலத்தில் ஊழியம் செய்தார்கள்.

யோதாம் மரித்தபின்னர் தாவீதின் பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான் (2 இரா. 15:38; 2 நாளா. 27:7-9).

இயேசுவானவரின் வம்சாவளியில் இவனுடைய பெயர் வருகிறது.

 (மத். 1:9).


2.கிதியோனின் இளைய குமாரன்:


யெருபாகால் என்று அழைக்கப்பட்ட கிதியோனின் இளைய குமாரன். மூத்த குமாரனாகிய அபிமெலேக்கு தனது சகோதரர் எழுபது பேரையும் கொன்றுபோட்டபோது, இவன் ஒளிந்திருந்தபடியால் உயிர்தப்பினான் (நியா. 9:5).

இவன் கெரிசீம் மலையின் உச்சிக்குச் சென்று சீகேம் பட்டணத்து மனிதரிடம் மரங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவைத் தெரிந்தெடுத்தது குறித்த உவமைக் கதையைக் கூறியவர் இவர் தான்.

என்றாலும் அபிமெலேக்குக்குப் பயந்த இவன் தப்பியோடி பேயேரில் குடியிருந்தான் (நியா.9:21). 

யோதாம் அபிமெலேக்கைக் குறித்துச் சொல்லியிருந்த வார்த்தைகளின்படி அபிமெலேக்கு கொல்லப்பட்டான்….



Post a Comment

0 Comments