மகளிர் தினம் தியானம் -Women's Day Meditation (உல்தாள்)

 மகளிர் தினம் தியானம்

Women's Day Meditation

உல்தாள் 

(வேதபகுதி : 2 ராஜா 22:14-20; 2 நாளா 34:22-33)


யோசியா ராஜா எருசலேமை ஆட்சி செய்த நாட்களில் உல்தாள் என்ற தீர்க்கதரிசினி எருசலேமில் வாழ்ந்துவந்தாள். இவள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துவந்தவள். இவள் கணவனான சல்லூம், , வஸ்திரசாலை விசாரிப்புக்காரன். இந்த உல்தாள் வாழ்ந்து வந்த நாட்களில்தான் எரேமியா, செப்பனியா போன்ற தீர்க்க தரிசிகள் வாழ்ந்துவந்தார்கள். உல்தாளின் பணி எருசலேம் ஜனங்களுக்கு யேகோவா தேவனைப்பற்றி ஆணித்தரமாகச் சொல்லி தேவனை அறியவைப்பது.

 இந்த உல்தாளை ஆண்டவர் இஸ்ரவேலின் எழுப்புதலுக்குப் பயன்படுத்தினார். முழு தேசமும் மனம் திரும்பியது. எப்படி ஒரு பெண் இப்படி ஒரு தேசத்தின் மனம் திரும்புதலுக்குக் காரணமாய் இருக்க முடியும்?


யோசியா ராஜா ஆட்சிக்கு வந்த பதினெட்டாம் ஆண்டு எருசலேம் தேவாலயம் பழுதுபார்க்கப்பட்டது. பழுதுபார்க்கும் வேலை நடக்கும் நாட்களில் விலையேறப்பெற்ற நியாயப் பிரமாணப் புத்தகம் ஆலயத்தில் ஆசாரியன் இல்க்கியாவால்

கண்டெடுக்கப்பட்டது. விசுவாசத்தை மறுதலிக்கிறவர்கள் பார்க்காதபடி ஆசாரியன் இல்க்கியாவின் கையில் அப்புத்தகம் கிடைத்தது மிகப்பெரிய காரியமன்றோ! ஏசாயா 40:8 சொல்லுகிறபடி பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட கர்த்தரின் வார்த்தையை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இப்படிக் கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாணப் புத்தகம் ராஜாவாகிய யோசியாவிடம் அனுப்பப்பட்டது, வாசிக்கப்பட்டது.

ராஜாவை மனஸ்தாபப்பட வைத்தது. ஆம், எப்படி முகம்  பார்க்கும் கண்ணாடி அப்படியே காட்டுகிறதோ, அதேபோல் வேதம் நம் ஆவிக்குரிய நிலையைக் காட்டும். குறைகள், குற்றங்கள், பாவங்கள் ஆகியவற்றை உணர்ந்து மனம் திரும்பச் செய்யும். தனது தவறையும் தனது ஜனங்களின் பாவங்களையும் உணர்ந்த ராஜா மிகுந்த வருத்தமடைந்தான் , ஜெபித்தான். தனது மக்களின் பாவத்தினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டதோ என அறிய விரும்பி உடனே தன் ஆசாரியனாகிய இல்க்கியா, சம்பிரதி சாப்பான் மற்றும் சிலரைக் கர்த்தருடைய தீர்க்கதரிசியிடம் விசாரித்து வரும்படி அனுப்பினான்.


அந்நாட்களில் எரேமியா, செப்பனியா போன்ற பிரபலமான ஆண் தீர்க்கதரிசிகள் இருந்தாலும் ராஜாவால் அனுப்பப்பட்ட இல்க்கியாவும் மற்றவர்களும் '

உல்தாள்' என்ற இந்தப் பெண் தீர்க்கதரிசியிடம் சென்றார்கள். ஆசாரியர்கள் தேடிச் செல்லும் அளவிற்கு உல்தாள் மதிப்பும், நம்பிக்கையும் உடையவளாக இருந்தாள். இவர்களுக்கு உல்தாள் கொடுத்த பதில் என்ன?

 (2 நாளா 34:23-28).

 கர்த்தரிடத்திலிருந்து வார்த்தைகளைப் பெற்ற அவள் தன்னுடைய சுய விருப்பத்தின்படி அல்ல. கர்த்தர் தனக்கு வெளிப்படுத்தியதை அப்படியே சொன்னாள். அதனால்தான் தன்னுடைய தீர்க்கதரிசனத்திலே நான்கு முறை கர்த்தர் உரைக்கிறார், கர்த்தர் சொல்லுகிறார் என்று ஆணித் தரமாகச் சொன்னாள். கேட்க வந்தவர்களின் உள்ளத்தில் பதியும்படியாக, தெளிவாக, நேர்மையாக, ஒளிவுமறைவு இல்லாமல், கூட்டாமல், குறைக்காமல், வெட்கப்படாமல், பயப்படாமல், அதிகாரமாய், தைரியமாய், நியாயப்பிரமாண புத்தகத்தில் சொல்லியுள்ள வார்த்தைகளை உறுதிப்படுத்தி ராஜாவின் நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னாள். அவளுடைய வாஞ்சையும் தாகமும்

இஸ்ரவேல் மக்கள் நியாயப்பிரமாணச் சட்டங்களை அறிந்து மனம் திரும்ப வேண்டும், எழும்புதல் தீ பற்றியெறிய வேண்டும் முழு தேசமும் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என்பதே.


உல்தாளின் தீர்க்கதரிசனங்கள் அப்படியே ராஜாவிடம் கொண்டு செல்லப்பட்டது. கர்த்தர் பெரிய அறுவடையைக் கட்டளையிட்டார். ராஜாவும் சகல குடி மக்களும் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போனார்கள். ஜனங்கள் கேட்கும் படி நியாயப்பிரமாணப் புத்தகம் வாசிக்கப்பட்டது. ராஜா தன்னை முற்றிலும் கர்த்தருக்கு அர்ப்பணித்து கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன். முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைக ளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்று உடன்படிக்கைபண்ணினான். குடிமக்களும் தங்களைக் கர்த்தருக்கு அர்ப்பணித்து உடன்படிக்கைபண்ணினார்கள். ராஜா தேசத்தில் காணப்பட்ட அருவருப்புகளையெல்லாம் அகற்றி குடிமக்களைக் கர்த்தரைச் சேவிக்கும்படிச் செய்தான் என்று 2 நாளா 34:33 சொல்கிறது. 

ஆம், ராஜாவும் மக்கள் அனைவரும் மனம் திரும்பினார்கள். எழுப்புதல் தீ, பற்றி யெறிந்தது.


பிரியமானவர்களே, உல்தாள் ஒரு பெண்தான். அவள் இஸ்ரவேலின் எழுப்புதலுக்கே காரணமாய் இருந்தாள். கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் எத்தனை பேரின் இரட்சிப்புக்குக் காரணமாய் இருந்திருக்கிறோம்? எத்தனை பேருக்கு ஆண்டவர் இயேசு உலகத்திற்கு வந்த நோக்கத்தை தெரிவித்திருக்கிறோம்? 

1 கொரி 9:16 இன்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது நமது கடமை. ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுவது பரலோகத்தில் நாம் சேர்த்துவைக்கும் பொக்கிஷம். இவ்வுலக சொத்துக்கள் இவ்வுலக வாழ்க்கைக்குமட்டுமே. 'ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்கிறவன் ஞான முள்ளவன்' (நீதி 11:30). 

உல் தாளை இஸ்ரவேலின் இரட்சிப்புக்குப் பயன்படுத்திய ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும்

பயன்படுத்துவார் என விசுவாசித்து ஆத்துமாக்களை அறுவடை செய்வோம். பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்ப்போம்.


'ஆத்தும ஆதாயம் செய்குவோமே! இது ஆண்டவருக்குப் பிரியம்'. ஆண்டவரின் நாமத்தினால் ஆசீர்வாதம் பெறுவோம்…

Post a Comment

0 Comments