சமுதாய விடுதலையில் கிறிஸ்தவர்களின் பங்கு (The role of Christians in social liberation)


 சமுதாய விடுதலையில் கிறிஸ்தவர்களின் பங்கு


 (The role of Christians in social liberation)


# இந்திய தேசத்தின் சுதந்தரத்திற்கு கிறிஸ்தவர்களின் பங்களிப்பு ஒன்றும் கிடையாது என்பது மதவாத மக்களின் கருத்தாகும். ஆனால் பல கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்தரத்தின் விடுதலைக்காகப் போராடி தங்களின் பங்களிப்பை மிக சிறப்பாக கொடுத்தார்கள். இந்திய மக்களின் சுதந்தரத்திற்கு மிஷனெரிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. வெள்ளைக்காரர்களின் அடிமைத்தனத்தினின்று மக்கள் பெற்ற சுதந்தரத்தைக் காட்டிலும் ஆதிக்கமிக்க மக்கள் கூட்டத்திலிருந்து பாமரமக்கள் பெற்ற விடுதலைக்கு வித்திட்டவர்கள் மிஷனெரிகள் என்பதுதான்.💢


கல்வியில் கண்ட விடுதலை


💢கிறிஸ்தவத்தை அறிவிக்க வந்தவர்கள் ஏன் தமிழ் மீது அத்தனை காதல் கொண்டிருக்க வேண்டும் என்பது பெரிய கேள்வியே. இறைவனை அறிவிக்க வந்தவர்கள் கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றின தொண்டினை யாரும் மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட சமய, வாணிப மற்றும் அரசியல் தொடர்புகளால் தமிழில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. மயிலை சீனி. வேங்கடசாமி என்பவர் எழுதிய "கிறிஸ்தவமும் தமிழும்" என்ற நூலில், “தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி பெரும்பாலும் ஐரோப்பியப் பாதிரியார்களால் உண்டானவையே", என்று கூறியிருக்கிறார்.


தமிழுக்கு புது உருவம் தந்தவர்கள் மிஷெனெரிகள்:


தமிழ் மொழியானது பாமரரும் புரிந்து கொள்ளவும், வாசிக்கவும் கூடாத மொழியாகவே பல நூற்றாண்டுகளாக இருந்தது என்று உரைநடை தோன்றிய வரலாற்றில் காண முடியும். தமிழில் இலக்கியம் மட்டும் கவிதைகளாக இருக்கவில்லை, மருத்துவம், சோதிடம், இலக்கணம், இறையியல், தத்துவம், அகராதி என அனைத்தும் கவிதைகளாகவே இருந்தது. உரைநடைகளை தமிழர்கள் ஒரு பொருட்டாக எண்ணியதில்லை என எம். சீனிவாச அய்யங்கார் கூறுகின்றார்.


பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த அபி டுபாய் என்ற கத்தோலிக்கத் துறவி 'தொன்றுதொட்டே இந்துக்களுக்குக் கவிதை மட்டுமே பழக்கமாக இருந்து வந்திருக்கிறது. கவிதை மீது அவர்களுக்கு மதிப்பு அதிகம், வேறு எந்த எழுத்துவகை மரபும் இருப்பதாகத் தெரியவில்லை.


அவர்களின் பழைய நூல்களில் ஒன்று கூட உரைநடையிலோ அல்லது மக்கள் பேசும் பாமர மொழியிலோ இல்லை. அவர்களுடைய மருத்துவ நூல்கள் கூட கவிதைகளாகத்தான் இருக்கின்றன. இப்படி பாமரருக்குப் புரியாத மொழியில் எழுதிவருவது அந்தணரின் யுக்தியாகத் தெரிகிறது. அறிவு துறைகளில் பிற சாதியினர் புகாதிருக்கவும், அவற்றைத் தாங்கள் ஏகபோகமாக அனுபவிக்கவும், அவர்கள் கையாண்டுவருகிற பழக்கமாக இருக்கிறது' என்கிறார். இந்நிலையை மாற்றியவர்கள் கிறிஸ்தவர்கள்.


கத்தோலிக்க சமயத் தொண்டர்கள் பதினாறாம் நூற்றாண்டின் நடுவில் தமிழகம் வந்து சேர்ந்தபோது அவர்கள் தங்கள் சமய நூல்களை உரைநடையிலேயே எழுத தொடங்கினார்கள். நவீன உரைநடைக்கு நடைபாதை அமைத்தவர்கள் கிறிஸ்தவர்களே.


பாமரருக்கு தமிழ் தந்தவர்கள் மிஷெனெரிகள


இந்துமதத்தின் மனுதர்ம சாத்திரத்தின்படியாக பிரம்மனின் தலையிலிருந்து பிறந்த மேல்சாதியினர் மட்டுமே கல்வி கற்க வேண்டும், மற்றவர்கள் கல்வி கற்பது பெரும் பாவமாகவே கருதப்பட்டது. பிராமணர்கள் வேதத்தை படிக்கும்போது கீழ்சாதியினர் ஒருவர் அதனைக் கேட்டுவிடுவாரானால் அவரது காதுகளில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றி அவரை கொடுமைப்படுத்தியிருக்கின்றார்கள். அப்படியாக மக்களுக்கு தூரமாக இருந்த படிப்பை எல்லா வீட்டின் படிக்கட்டுகளுக்கே கொண்டு சேர்த்தவர்கள் மிஷனெரிகள்.

அக்காலங்களில் பேசப்பட்ட தமிழுக்கும் எழுதப்பட்ட தமிழுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதிருந்தது. இந்நிலையை மாற்றியவர்கள் கிறிஸ்தவர்கள். 


நவீன உரைநடைக்கு நடைபாதை அமைத்தவர்கள் கிறிஸ்தவர்களே. அவர்களுள் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் பகுதியில் ஊழியம் செய்த அன்டிரீக்ஸ் என்பவர் ஆவார். அன்டிரீக்ஸ் என்பவர் தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய கிறிஸ்தவர் ஆவார்.


1520ல் போர்ச்சுகல்லில் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர் இவர். 1546ல் மிஷனெரியாக தென் இந்தியா வந்தார். பிரான்ஸ்சிஸ் சேவியர் தமிழ் நாட்டை விட்டு போனபின்பு அப்பகுதிகளின் பொறுப்பு அன்டிரீக்ஸ்சிடம் வந்தது. இவர் நம்முடைய ஊரின் மிக அருகான புன்னக்காயல், தூத்துக்குடி, மணப்பாடு போன்ற இடங்களில் பணியாற்றியவர். தமிழ் கற்று, கல்வியறிவு அதிகம் இல்லாத இவர்களுக்கு தங்களுக்குப் பழக்கமான மொழியில் சமய நூல்கள் எழுதி அவற்றை அச்சிட்டுக் கொடுத்தார்.


மூன்று நூல்களை இவர் மொழிப்பெயர்த்துள்ளார். "தம்பிரான் வணக்கம்", கிரீசித்தியானி வணக்கம்" மற்றும் "ஃபிளாஸ் சான்க்டோரம்" என்பவைகளே. இந்நூல் 1586ம் ஆண்டு புன்னக்காயலில் அச்சாகி இருக்கிறது. 1954ல் தான் இது வத்திக்கான் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 1967ல் மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். தலைப்பு இல்லாததால் "அடியார் வரலாறு என்று பெயர் சூட்டப்பட்டது. இவரது தமிழ்நடை எளிமையானது, சரளமானது. அவர் வாழ்ந்த பகுதியின் மக்கள் பேசியும் எழுதியும் வந்த மொழியை அடிப்படையாகக் கொண்டு தம்முடைய நூலை இவர் மொழிபெயர்த்துள்ளார்.


இதற்கு முன்னர் இப்படி மக்கள் பேசும் மொழியில் இலக்கியங்கள் உருவாகவில்லை என்பது உண்மை . பாமரரும் தமிழின் புகழை உணர செய்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்பது புலனாகிறது. இவரைத் தொடர்ந்து திருநெல்வேலி மிஷன் பகுதிகளுக்கு வந்த மகாகனம். கால்டுவெல் பேராயர், டாக்டர் போப் அவர்கள் இன்னும் பலர் தமிழ் மொழிக்கு ஆதிக்க மக்களிடமிருந்து மாபெரும் விடுதலையை பெற்று கொடுத்தனர்.


பெண்ணடிமைக்கு முடிவு கட்டியவர்கள் மிஷனெரிகள


இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் பகுதியில் வாழ்ந்த அநேக பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைப்பதற்கு அனுமதி கிடையாது. கேரளாவிலே வாழ்ந்த நாயர்கள் மற்ற மக்களை ஆட்சி செய்து இவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள். 1822ம் ஆண்டு தற்சமயம் கன்னியாகுமரி எல்கைக்குட்பட்ட கல்குளம் என்ற கிராமத்தில் ஒரு கலகம் வெடித்தது. ஒரு சில நாயர்கள் சேர்ந்து கிறிஸ்தவநாடார் பெண்களை மேலாடை அணிந்ததற்காக தாக்கினார்கள். அச்சமயம் அப்பகுதியில் ஊழியம் செய்த மிஷனெரிகள் நீதிமன்றத்தை அணுகி கிறிஸ்தவ நாடார்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளலாம் அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று நல்ல தீர்ப்பினைப் பெற்று கொடுத்தனர்.


ஆனாலும் கிறிஸ்தவ நாடார் பெண்கள் நாயர் பெண்களைப் போன்று ரவிக்கை அணிய கூடாது. இரண்டு ஆண்டுகள் கழித்து கிறிஸ்தவ நாடார்

பெண்கள் நாயர் பெண்களைப் போன்று ரவிக்கை அணிய ஆரம்பித்தார்கள். அணிய ஆரம்பித்ததும் பிரச்சனை இன்னும் வலுப்பெற்றது. நாயர்கள் அநேக ஆலயங்களையும், பள்ளிக்கூடங்களையும் தீக்கிரையாக்கினார்கள். அச்சமயம் மெட்ராஸ் பிரஸிடென்ஷியின் கவர்னர் அவர்கள் மிஷனெரிகளின் வேண்டுகோளுக்கிணங்க கிறிஸ்தவ நாடார் பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமென்றாலும் ரவிக்கை அணிந்துக் கொள்ளலாம் என்ற ஆணையை பிறப்பித்தார். 


அநேக புறமதஸ்தர்கள் மிஷனெரிகளின் அயராத உழைப்பையும், பெண்களின் மானத்தைக் காப்பதற்கு எடுக்கும் முயற்சிகளையும் கண்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். அடிமைத்தன வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்து விடுதலையின் வாழ்வை சமுதாயத்தில் பெற்று கொடுத்தார்கள்.


சுதந்தரப் போராட்டத்தில் கிறிஸ்தவர்கள.


இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராடின கிறிஸ்தவர்களின் பெயர்களை அநேகர் அறிந்திருக்கமாட்டார்கள். எதிர்தரப்பினர் இந்தக் கேள்விகளை நம்மிடம் கேட்டால் பெரிய யோசனையே நம் உள்ளத்தில் மேலிடுமே தவிர பதில் வராது. ஆனால் பல கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை இந்திய தேசத்தின் விடுதலைக்காகக் கொடுத்திருக்கிறார்கள். சில மிஷனெரிமார்கள் கூட இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டிருக்கிரார்கள். ஸ்டான்லி ஜோன்ஸ்(Stanley Jones), C.F அன்ட்ரூஸ் (C.F.Andrews), J.C வின்ஸ்லோ (J.C.Winslow), வாரியர் எல்வின் (Varrier Elwin), ரால்ஃ ரிச்சர்ட் கேதான்(Ralph Richard Keithahn), எர்னஸ்ட் பார்ஸ்ட ர் பேட்டன் (Ernest Forrester-Paton) போன்றோர்கள் இப்பட்டியலில் அடங்குவார்கள். ஒரு சில மிஷனெரிகள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக தேசத்தையே விட்டு சென்றிருக்கின்றனர்.


இந்திய தேசிய காங்கிரசின் மிக முக்கியமான பொறுப்புகளில் பல கிறிஸ்தவர்கள் பங்காற்றியிருக்கின்றனர். பல அமர்வுகளில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகவே இருந்தது. இந்திய தேசிய காங்கிரசின் வரலாற்று பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு நன்கு புலப்படுகிறது.


உதாரணமாக 1887ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 607 பேர் பங்கு பெற்றார்கள். இவர்களில் 15 பேர் கிறிஸ்தவர்கள் என்பது பெருமைப்படக் கூடிய தகவல். அதோடு கூட நிறுத்திவிடவில்லை, பற்பல போராட்டங்களிலும் , இயக்கங்களிலும் இந்திய தேசத்தின் விடுதலைக்காக கிறிஸ்தவர்களின் பங்கிளிப்பு இருந்துள்ளது. சுராஜ் இயக்கம் (1905), ஒத்துழையாமை இயக்கம் (1920), சட்ட மறுப்பு இயக்கம் (1930), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942), போன்ற இயக்கங்களில் பங்குவகித்து கிறிஸ்தவர்களின் விடுதலைக்காக போராடினார்கள். 1973ம் ஆண்டு தமிழக அரசு விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழர்களின் வாழ்க்கை அடங்கிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டார்கள் (Who is who of Freedom Fighters, Tamil Nadu) அந்த பெயர்களில் 103 பெயர்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை டாக்டர்.


ஆர்தர் ஜெயக்குமார் என்ற வரலாற்று ஆசிரியர் கண்டறிந்து கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்திய நாட்டின் பற்பல அடிமைத்தனங்களின்று இத்தேசத்திற்கு விடுதலையைப் பெற்று கொடுத்த பெருமை மிஷனெரிகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சாரும் என்பது அப்பட்டமான உண்மை. என்னதான் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்தையும் ஓரங்கட்ட நினைத்தாலும், வரலாற்றின் பக்கங்களில் சாட்சிபகர்ந்து கொண்டிருக்கும் மிஷனெரிகளின் சாட்சியுள்ள வாழ்வை ஒரு போதும் புறம் தள்ளிவிட முடியாது.



Post a Comment

0 Comments