Daily Devotion (கர்த்தரிடம் திரும்புங்கள்)


Daily Devotion


கர்த்தரிடம் திரும்புங்கள்


(Tear your heart and turn to the Lord)

இருதயத்தையே கிழித்து… கர்த்தரிடம் திரும்புங்கள்.” – யோவேல் 2 : 13


மனிதன் மலைகளின் உயரத்தை அளக்கிறான். கடலின் ஆழத்தை அளக்கிறான். கோள்களின் தூரத்தை அளக்கிறான். ஆனால் மனித உள்ளங்களை அறிய முடிவதில்லை. நாம் பல வேளைகளில் தவறே செய்யாதவர்கள் போல நடந்து கொள்ளுகிறோம். எல்லா பிரச்சனைகளுக்கும் பிறரே காரணம் என்று குற்றம் சாட்டுகிறோம்.


எபிரேய உளவியல் கருத்துப்படி இருதயம் ஒருவரது மன எண்ணங்களை வெளிப்படுத்தும். இஸ்ரவேலரின் பாவங்களை சுட்டிக்காட்டி மனந்திரும்ப யோவேல் தீர்க்கர் அழைக்கிறார். உண்ணா நோன்பு, அழுகை, புலம்பல் ஆகியன மனந்திரும்புதலைச் சுட்டிக் காட்டும் புறம்பான சடங்குகள். முழு இருதயத்தோடும், புறம்பான திரும்புதல் மட்டுமன்றி உள்ளான, உண்மையான மனந்திரும்புதல் தேவை என்கிறார் தீர்க்கர். இதனால் தான் உங்கள் இருதயத்தைக் கிழித்து, சுயசித்தத்தைக் கிழித்தெறிந்து, கடவுளிடம் திரும்புங்கள் என்று அறைகூவி அழைக்கிறார். இத்தகைய மனந்திரும்புதலேயே கடவுள் விரும்புகிறார் என்கிறார். இதுவே கடவுளின் இரக்கத்தையும் கிருபையையும் நாம் பெற வழி வகுக்கும். ஒளிவு மறைவு இன்றி நாம் கடவுளிடம் பாவங்களை அறிக்கை செய்ய கடவுள் விரும்புகிறார். கடவுள் எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றையும் காண்கிறவர். நாம் பேசுவதைக் கூட கேட்கிறவர். இதை மறந்துவிடாதபடி மனமாற்றம் பெற தீர்க்கர் அழைக்கிறார்.


அன்பானவர்களே நாமும் உள் ஒன்று வைத்து வெளி ஒன்றை பேசுகிறவர்கள். நம் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் இதைக் காண முடியும். இதை மாய்மால வாழ்க்கை என்பார்கள். இதற்கு நாம் யாரும் விதிவிலக்கல்ல. இந்தக் கட்டுகளிலிருந்து இந்த தவக்காலத்தில் நாம் வெளி வருவோம். நமது இருதயத்தில் மறைந்திருக்கிற பாவங்களை ஒளிவு மறைவு இன்றிஅறிக்கையிடுவோம். இயேசுவின் பாடு மரணத்தை தியானிக்கிற இக்காலத்தில் கடவுளின் இரக்கமும் அன்பும் இயேசுவில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது என்பதை அறிந்து கொள்ளுவோம்.


பாவத்திற்கு நாம் விலகி ஓட முடியாது. பவுலடிகளார் சொல்லும்போது, நன்மை செய்ய விரும்புகிறேன். ஆனால் தீமையே செய்கிறேன். இதற்கு என்னுள் வாசமாயிருக்கிற (ஜென்ம) பாவமே காரணம் என்கிறார். பாவத்தின் தண்டனையிலிருந்து விடுபட, வாழ்வு பெற, ஒளிவு மறைவு இல்லாத பாவ அறிக்கை ஒன்றே வழி. கடவுளோடு பயணிப்போம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.


அன்பின் கடவுளே! நாங்கள் மாய்மால வாழ்க்கை வாழுகிறோம் என்பதை மனதார ஒத்துக் கொள்கிறோம். இயேசுவின் கபடற்ற அன்பை உணர்ந்து பாவங்களை திறந்த மனதோடு அறிக்கையிட்டு பாவமன்னிப்பைப் பெற கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

Post a Comment

0 Comments