தள்ளிப் போடுங்கள் (Daily Devotion)

 தள்ளிப் போடுங்கள்


(1 கொரிந்தியர் 5:1-13)


புறம்பே இருக்கிறவர்களை குறித்துத் தேவனே தீர்ப்பு செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத் தள்ளிப்போடுங்கள்" - 1கொரி 5:13


எல்லா ஆத்மாக்களும் என்னுடையவர்கள் என்றும், துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தில் மரிப்பதை நான் விரும்பாமல், அவன் தன் துன்மார்க்கத்தை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே நான் விரும்புகிறேன் என்றும், நீதிமான் களையல்ல, பாவிகளையே மனந்திரும்ப அழைக்க வந்தேன் என்றும் கூறின கர்த்தர் இங்கு, அந்தப் பொல்லாதவனை உங்களை விட்டுத்தள்ளிப் போடுங்கள் என்று கூறக் காரணம் என்ன?


இந்த வசனத்தை தேவன் நேரிடையாகக் கூறாமல், பவுல் மூலமாகக் கூறுகிறார். இல்லையென்றால் பவுல் கூறினதை தேவன் அப்படியே அங்கிகரிக்கின்றார். அந்த பொல்லாதவன் ஏன் தள்ளப்பட வேண்டும் என்பதுதான் இன்றையக் கேள்வி. அந்த பொல்லாதவன், அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபச்சாரத்தைச் செய்து கொண்டு வந்தான். ஆனால் இன்னும் அவன் சபையாகிய பரிசுத்த ஐக்கியத்திற்குள் இருக்கிறான். எனவே அவனைப் பார்த்து அவனுடைய நடக்கைகளைக் கண்டு, மற்றவர்களும் இடறிப் போகாத படிக்கு, அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப் போடுங்கள் என்று பவுல் மூலமாக தேவன் கூறுகிறார்


தேவனுடைய பிள்ளையே! சில நபர்கள் நம்மோடுகூட இருப்பது நமக்கு ஆசீர்வாதம். அதே சமயம் சில நபர்கள் நம்மோடுகூட இருப்பது நமக்கு ஆபத்து நமக்கு யார்யாரெல்லாம் ஆபத்தாயிருக்கிறார்களோ அவர்களை நம்மை விட்டுத் தள்ளிப்போடுதல் நமக்கு மிகுந்த ஆசீர்வாதம். அப்படிப்பட்டவர்களால் நமக்கு எவ்வளவு ஆதாயம் இருந்தாலும், அவர்களை நாம் தள்ளிப்போட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் கொஞ்சம் கடுமையாகவே இருக்க வேண்டும். தேவனுடைய காரியங்களுக்காக நாம் கட்டாயம் வைராக்கியம் பாராட்டத்தான் வேண்டும். இந்த விஷயத்தில் யார் நம்மைப்பற்றி என்ன பேசினாலும் நாம் கவலைப்படக்கூடாது. கலங்கவும் கூடாது. நமக்கு, நாமும் நம்முடைய பரிசுத்தமும் முக்கியம். எனவே இந்தக் காரியத்தில் மிகவும் கருத்துள்ளவர்களாயிருந்து, நம்மைக் காத்துக் கொள்ளுவோம். இதற்கான தைரியத்தையும், வைராக்கியத்தையும் கர்த்தர்தாமே

நமக்குத் தருவாராக. ஆமென்..


 மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள்…


Post a Comment

0 Comments